Monday, August 26, 2013

மாற்றுவோம் தமிழகத்தை ...

 
சாலைகள் எங்கும் மரணக்குழி - இங்கு
சாதியின் பெயரால் அரசியல்கள்
வேலைகள் இல்லா இளைஞர்படை - என்று
வெம்பி வெதும்புது தமிழ்நாடு,
 
சுயநலம் கயமை கையூட்டு - உடன்
சுரண்டலும் சேர்ந்தது அரசாங்கம்
பயமிலை என்ற சொல்கூட - இங்கு
பயனற்றுப் போனது மக்களுக்கு,
 
அரசியல் இங்கே தொழிலாச்சு - அது
ஆட்சி செய்பவர்கள் பணம்பார்க்க
தொழில்களில் எல்லாம் அரசியல்கள் - அது
தொழில் முனைவோரை பதம்பார்க்க,
 
பெற்று வளர்த்தவர்க் கிடமில்லை - என்று
புகுந்தகம் அனுப்பிடும் பிள்ளைகளும்
வெற்றி பெருவோம் எனச்சொல்லும் - இது
வேடிக்கையான தமிழ்நாடு,
 
இந்த நிலையை மாற்றிடவே
இறைவா எனக்கொரு வரம்கொடு நீ
மந்தநிலை கொண்ட மடமனிதர் - எல்லாம்
மாண்டிடவே நல்ல சாபம்கொடு,
 
உறுப்பறுத்தெறியும் தைரியமும் - எங்கும்
உண்மையே பேசிடும் உளத்துணிவும்
கருத்தொருமித்த நண்பர்களும் - கொடு
கட்டாயம் மாற்றுவோம் தமிழகத்தை.
- ஏமாளி - http://yemali12.blogspot.in/

Friday, August 23, 2013

அடிமையாய் நான் ...



உப்புசப்போடு சமைத்துப்போட
உள்ளாடைகளை உலர்த்திப்போட
உன் உறவுகளை
உள்ளம் நோகாமல் உபசரிக்க ...


அலசிய கூந்தலையும்
அள்ளி முடிய நேரமின்றி
பரட்டை தலையோடு உன் பெண் பிள்ளைக்கு
ரெட்டை சடை பின்னலிட . . .


நடுநிசியில் துயில்கொண்டு
கதிரவனோடு கண்விழிக்க
எதிர் வீட்டுப் பெண்களிடம்
என் கணவன் போல் வாராதென
உன் புகழ் பாடிட . . .


கூப்பிடும்போது புணர்ந்துகொள்ள
காதலுக்கோ காமத்துக்கோ
நீ பெற்ற பிள்ளைகளை
ஊர் போற்ற வளர்க்க . . .


அத்தனை ஆண்களுக்கும் தேவை
ஓர் அழகிய அடிமை
மனைவி என்ற பெயரில் . . .


நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

Wednesday, August 21, 2013

பிரிவின் தொடக்க நாள் ...


 

உறவுகள் பிரிவது புதிதல்ல
என் உள்ளம் உடைவதும் புதிதல்ல
ஆயினும் இம்முறை மட்டும் ஏன்

இப்படி கனக்கிறது என் இதயம் . . .

நான் சுவாசித்த ஒருவன் 
என்னை நேசிக்க மறுக்கும்தருணம்
நான் யாசித்த இவ்வுலகத்தை
யோசிக்கவும் மறந்தேன் . . .


இம்மையிலும் மறுமையிலும்
விசை இயக்கி இல்லாமலே
வேகமாய் அவனை நினைவில்
கொள்ளும் எண்ணங்கள் ...


துடைப்பத் தூரிகை இல்லாமலே
வேகமாய் தொலைந்து போகும்
மழைக்கு முன்னர் வந்து மறையும்
வானவில் போல ...


ஆழமாய் அன்புகொண்டவரிடத்தே
அதிகமாய் எதிர்பார்க்கிறது மனம்
எதிர்பார்ப்புகள் ஏமாற்றப்படும்
பொழுதுதான் உரைக்கிறது
மனிதனின் மனம்
மாயை என்று . . .
   


நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா

Wednesday, August 7, 2013

கனாத்தோற்றம்...





 அன்று ஓர் நள்ளிரவில்

இருகமூடிய கண்களுக்குள்

இறுக்கமாய் ஒரு கனவு ...

ஆளில்லாத நடைபாதையில்

ஆகாயம் தெளித்த

தண்ணீர் மழையில்


நானும் நண்பனும்

இரயில் பாதையை

கடக்க முயன்றோம்...

ஏதோ காலை பிடித்து

இழுத்தார்போல் சட்டென விழுந்தேன்

கால்கள் உணர்ச்சியிழந்து

 
தொலைவில் தொடர்வண்டி சத்தம்

எமனின் கூக்குரலாய்

என் காதில் ஒலித்தது...

சத்தமிட்டு உன்னை

அழைக்க முடியாமல்

சிறு முனகலுடன் அழைத்தேன்...


முனகல் உணர்ந்தவனாய்

முகம் திருப்பி

என் அகம் கண்டாய்...

என் கண்களும் கரங்களும்

உன்னையன்றி யாரையும்

நம்பவில்லை என்பதுபோல்


கை நீட்டி என்னை

காப்பாற்று என்றேன் ...

என்ன நினைத்தாயோ

தெரியவில்லை

தொடர்வண்டியை நோக்கினாயோ

புரியவில்லை ...


எதையும் அறியாதவனாய்

திரும்பிக்கொண்டாய்

இரக்கமின்றி என் தோழமையை

மௌனமாய் கொன்றாய் ...

மனம் அமைதி கொண்டது

மீளா உறக்கத்திற்கு தயாரானேன்


இரயிலவன் (காலவன்) என்னை

ஏற்றிக்கொண்டான் (கொன்றான்)...

படபடத்த உடலோடு

சட்டென விழித்து

கலங்கிய கண்களோடு

குருதியை உரைய வைத்த கனவை

குறுஞ்செய்தியில் அனுப்பினேன் ...


கொக்கரிக்கும் சிரிப்போடு

கேலி நகையாடி

கனவுதானே என்றாய் ...

நெடுநாள் வளர்த்த நட்பு

நொடியில் கலைந்தது

அக்கனவோடு ...


நானும் என் எழுத்தாணியும்

சுப சத்யா ...

Monday, July 22, 2013

நிஜம் கதையானது .... !!! எதிர்நீச்சல் பெண் சாந்தி ...!!!


தமிழச்சி என்பதாலே 
இவள் தரம் தாழ்த்தப்பட்டாளோ ...?
ஏழ்மையில் வளர்ந்ததாலே
இவள் ஏமாந்து போனாளோ ...?


பெண்ணாக பிறந்ததாலே
இவள் பேரம் பேசப்பட்டாளோ ...?
கண்ணாடி கனவுகளில்தான்
கயவர்கள் கல்வீசக்கண்டாளோ ...?


புகழ் சேர்த்த கைதட்டல்கள்
பின்னால் ஒலிக்க ...
பாராட்டு பல கேட்டு
பழகிய காதுகளுக்கு ...
தன் மனமுடைக்கும் கூச்சலும்தான்
முதல்முறை கேட்டிட ...
வாய் இருந்தும் ஊமையாய்
சபைமுன் நின்றால் இவள் ...


சாந்தி என பெயர் சூடியதாலே
சகுனிகளின் சூழ்ச்சியிலும்
சத்தம் ஏதுமின்றி
சாந்தம் கொண்டால் இவள் ...!!!!


" வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம்
என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் "
வீரம் கொண்டு சாதித்த பெண்ணை
இவள் பெண்ணல்ல எனும்
ஈனமனிதர்கள்தான் வாழ்கின்றார் ... !!!!


நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா