Saturday, January 25, 2014

பசித்திருப்பின் ... !!!

 

பச்சிளங்குழந்தையின்   பாலுக்காக

 பாய்விரிக்கும்  பாதகியிடம்

 எப்படியுரைப்பேன் ...???

 இது சீதை  பிறந்த  தேசமென ... !!!

 

இனி  உழைக்க  இயலாதென 

தோல்சுருங்கி  துவண்டு  கையேந்தும் 

முதியோரிடம்  எப்படியுரைப்பேன் ...???

பிச்சையெடுத்தல் கேவலமென ... !!!

 

குழுமையில் இருந்த 

கடைசி  விதைநெல்லையும்

காய்ந்த  பூமியில்  விதைத்து 

பெய்யாத வானத்தை பார்க்கும் 

உழவனிடம் எப்படியுரைப்பேன் ...???

விவசாயம்  இறந்து 

காலங்கள்  கடந்ததென ... !!!

 

மாடிவீட்டு பிள்ளை  மென்ற  இனிப்பை 

வெறிக்க  பார்த்து  எச்சில்  ஒழுகி

கை  நீட்டி  ஏமாந்து 

வெடுக்கென  பிடுங்கி 

ஓடி ஒளிந்து  சுவைக்கும் 

பிள்ளையிடம்  எப்படியுரைப்பேன் ...???

திருட்டு    பாவமென ... !!!

 

ஒரு நொடி பேசவும்

உடல் கூசி நகரும்

அழுகிய ஆழ்மனதிடம்

எப்படியுரைப்பேன் ...???

இவர்களும் மனிதர்கள்தானெனெ ... !!!

 
நானும் என் எழுத்தாணியும்

சுப சத்யா ...
 

No comments :

Post a Comment