Saturday, December 28, 2013

நானும் என் எழுத்தாணியும் ...!!!


நதிகளில்  துயிலப் போவதில்லை 
வறண்ட  தரிசில்  வாழப்போகிறோம்    
மலர்களை நேசிக்க போவதில்லை
வியர்வை  நாற்றத்தை  சுவாசிக்க  போகிறோம் …!!!

காதலின்  மடியில்  கண்ணயரப்போவதில்லை
கற்பழிப்பை கருவறுக்கப் போகிறோம்
கடற்கரையை  ரசிக்கப் போவதில்லை
கெளரவக்கொலைகளை களையெடுக்கப் போகிறோம் …!!!

அழகியிடம்  மண்டியிடப்  போவதில்லை
அழகியல் முகத்திரையை  கிழிக்கப்போகிறோம்
வாழ்த்துரை வாசிக்கப் போவதில்லை 
ஒடுக்கப்பட்டவனின் வார்த்தையாகப் போகிறோம் …!!!

கோபுரத்தின் கலசமாக போவதில்லை
விவசாயியின் கோவணமாக போகிறோம்
வறுமையோடினைந்து  ஒப்பாரியிடப் போவதில்லை
ஊழலுக்கு வாய்க்கரிசி தேடிப்போகிறோம் …!!!

அறுசுவை உணவு எங்கள்  நாவிற்க்கில்லை
பிச்சைகாரியின் எச்சில் சோறாகப் போகிறோம்
அரசியல்வாதிக்கு குடைபிடிக்க போவதில்லை
வறியவனின் செருப்பாக போகிறோம் …!!!

கற்பனையில் மிதக்கப் போவதில்லை
நிஜமாய் வாழ்ந்து சகப்போகிறோம்
மழை தூரலாய்  கவிதைகளை  கொட்டப்போவதில்லை
உரைக்க  இயலாத  உள்ளத்தின் 
உணர்வுளை உரசிப் பார்க்கப்போகிறோம் …!!!

என்னோடு பயணிக்கும்
என்  எழுத்தாணியே
நீ அச்சமற்றவன் தான் ஆயினும்
ஒருபொழுதும்  உனக்கு  இன்பம்தரா
நான்  இரக்கமற்றவள் தான் …!!!

நானும்  என்  எழுத்தாணியும்
சுப சத்யா ...

No comments :

Post a Comment