Saturday, December 28, 2013

இல்லாமை என்றுமில்லை ...!!!



வேகமாய் சுழலும் பூமியில் 

ஒருவன் வேதனை அறிய எவனுமில்லை …


காசுக்காக ஓடும் கால்களுக்கிடையில் 

கண்ணுயர நேரமில்லை …


நட்சத்திர விடுதியின் உணவுக்கிடையில் 

அன்னையின் சமையல் ருசிக்கவில்லை …


நாகரிகவாதிகள் என்றுரைப்போம் 

நட்சத்திர விடுதியில் நாய்களுக்கும்

எங்களுக்கும் தூரமில்லை …


நெற்களஞ்சியம் தஞ்சை என்றோம் 

நஞ்சை புஞ்சை யெல்லாம் காணவில்லை …


தமிழகத்தில் அயலவர் அலுவலகம் 

தமிழ் பேசும் தமிழனுக்கு வேலையில்லை  …


எம் தேசத்தில் இல்லாமை என்றுமில்லை
ஊரெங்கும் உரக்க முழக்கமிட்டோம்

முப்பொழுதும் ஓடி                

மூன்று  வேலை  உணவோடு 

ஒரு  குண்டுமணி  தங்கமும் 

எங்கள்  சேமிப்பில்  இல்லை …!!!

நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

 

நானும் என் எழுத்தாணியும் ...!!!


நதிகளில்  துயிலப் போவதில்லை 
வறண்ட  தரிசில்  வாழப்போகிறோம்    
மலர்களை நேசிக்க போவதில்லை
வியர்வை  நாற்றத்தை  சுவாசிக்க  போகிறோம் …!!!

காதலின்  மடியில்  கண்ணயரப்போவதில்லை
கற்பழிப்பை கருவறுக்கப் போகிறோம்
கடற்கரையை  ரசிக்கப் போவதில்லை
கெளரவக்கொலைகளை களையெடுக்கப் போகிறோம் …!!!

அழகியிடம்  மண்டியிடப்  போவதில்லை
அழகியல் முகத்திரையை  கிழிக்கப்போகிறோம்
வாழ்த்துரை வாசிக்கப் போவதில்லை 
ஒடுக்கப்பட்டவனின் வார்த்தையாகப் போகிறோம் …!!!

கோபுரத்தின் கலசமாக போவதில்லை
விவசாயியின் கோவணமாக போகிறோம்
வறுமையோடினைந்து  ஒப்பாரியிடப் போவதில்லை
ஊழலுக்கு வாய்க்கரிசி தேடிப்போகிறோம் …!!!

அறுசுவை உணவு எங்கள்  நாவிற்க்கில்லை
பிச்சைகாரியின் எச்சில் சோறாகப் போகிறோம்
அரசியல்வாதிக்கு குடைபிடிக்க போவதில்லை
வறியவனின் செருப்பாக போகிறோம் …!!!

கற்பனையில் மிதக்கப் போவதில்லை
நிஜமாய் வாழ்ந்து சகப்போகிறோம்
மழை தூரலாய்  கவிதைகளை  கொட்டப்போவதில்லை
உரைக்க  இயலாத  உள்ளத்தின் 
உணர்வுளை உரசிப் பார்க்கப்போகிறோம் …!!!

என்னோடு பயணிக்கும்
என்  எழுத்தாணியே
நீ அச்சமற்றவன் தான் ஆயினும்
ஒருபொழுதும்  உனக்கு  இன்பம்தரா
நான்  இரக்கமற்றவள் தான் …!!!

நானும்  என்  எழுத்தாணியும்
சுப சத்யா ...

Friday, December 27, 2013

முதியோர் இருக்கை ...!!!

அலைந்து  ஓய்ந்து  அமர்ந்த 
ஆண்களை  எழுப்பும்  தாய்மாரே ...!!!
முதியோர்  இருக்கையில்  அமர்ந்தே
வாடைக் காற்று  சுவாசித்து 
வயோதிகர்  நிற்கப்   பார்க்க
உறுத்தாதோ  உங்கள்  உள்ளம் ...!!!


நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

அறுதலி ...!!!

எழுத்து மனிதனை சீராக்கும் ...!!!

அப்பா ...!!!

விவாகம் ...!!!

Friday, December 20, 2013

சூட்சமம் அறியேன் ...



சூது அறியும்
சூட்சமம் கொஞ்சம்
உணர வை இறைவா...!!!

வஞ்சகம் கொண்ட
நெஞ்சத்தை என்னிடம்
விலக்கி வை இறைவா ...!!!

விஷ வார்த்தைகள்
கக்கும் பிராணிகள்
அறவே அகற்றி வை இறைவா ...!!!
 

நயமாய் பேசி
போலியாய் நடிக்கும் நரிகள் 
அண்டாதிருக்க வை இறைவா ...!!!
 

சுயநலம் கொண்டே சுற்றம் கெடுக்கும்
உறவுகள் ஒருபோதும்
ஒட்டாதிருக்க வை இறைவா ...!!!
 

வஞ்சகர்கள் கூடி
எனை இம்சித்தாலும்
எவற்றையும் வெல்லும்
இரும்பு இதயம்
எனக்காய் வேண்டும் இறைவா ...!!!
 

எவரிடம் என் தோழமையாயினும்
சன்றோனை சீண்டாத
சிந்தனை போதும் இறைவா ...!!!

நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

Sunday, December 15, 2013

கவிதையானவள் . . .


ஆ த் ம ம் . . . .


கணினி காலம்தான் ஆயினும்
காதல் இன்னும் வலிக்கிறது ... !!!

மரத்துப்போன மனிதனில்
அவ்வப்போது மனிதநேயம்  விழிக்கிறது ... !!!

ஆங்கிலம் பேசும் நாவுக்கு
அடிபட்டதும் அம்மா என
அழைக்க மறவாமல் நடிக்கிறது ... !!!

போதையில் புத்தி மழுகும் 
ஆண்களுக்கு மத்தியில் நேசம் கொள்ளும்
ஆளுமையும் வாழ்கிறது  ... !!!

ரோட்டில் பசித்திருக்கும் உயிர் கண்டு
தான் மட்டும் புசிக்கும் நிலை - சில
நாட்களேனும் மனம் வெறுக்கிறது  ... !!!

காசுக்காக ஓடும் கால்கள்
எவனோருவனின் மரண ஊர்வலத்தில்
ஒருசில நொடிகளேனும் நிற்கிறது

இரும்பாய் போன மனிதனுக்கு
இன்னமும் இதயம் இயங்குகிறது ... !!!

ஆண்டு ஆயிரங்கள்  கடந்த பின்னும்
மனிதத்தில் ஆத்மம் 
அலைந்து கொண்டேதானிருக்கிறது  ... !!!

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா ... !!!