Saturday, January 25, 2014

பசித்திருப்பின் ... !!!

 

பச்சிளங்குழந்தையின்   பாலுக்காக

 பாய்விரிக்கும்  பாதகியிடம்

 எப்படியுரைப்பேன் ...???

 இது சீதை  பிறந்த  தேசமென ... !!!

 

இனி  உழைக்க  இயலாதென 

தோல்சுருங்கி  துவண்டு  கையேந்தும் 

முதியோரிடம்  எப்படியுரைப்பேன் ...???

பிச்சையெடுத்தல் கேவலமென ... !!!

 

குழுமையில் இருந்த 

கடைசி  விதைநெல்லையும்

காய்ந்த  பூமியில்  விதைத்து 

பெய்யாத வானத்தை பார்க்கும் 

உழவனிடம் எப்படியுரைப்பேன் ...???

விவசாயம்  இறந்து 

காலங்கள்  கடந்ததென ... !!!

 

மாடிவீட்டு பிள்ளை  மென்ற  இனிப்பை 

வெறிக்க  பார்த்து  எச்சில்  ஒழுகி

கை  நீட்டி  ஏமாந்து 

வெடுக்கென  பிடுங்கி 

ஓடி ஒளிந்து  சுவைக்கும் 

பிள்ளையிடம்  எப்படியுரைப்பேன் ...???

திருட்டு    பாவமென ... !!!

 

ஒரு நொடி பேசவும்

உடல் கூசி நகரும்

அழுகிய ஆழ்மனதிடம்

எப்படியுரைப்பேன் ...???

இவர்களும் மனிதர்கள்தானெனெ ... !!!

 
நானும் என் எழுத்தாணியும்

சுப சத்யா ...
 

யானும் வீழ்வேனோ ... ???

 
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிகிறேன்
விண்ணைத் தொட விரைந்தே பறக்கிறேன்
விண்மீனாய் நானும் ஜொலித்திடுவேனோ
சருகாய் புவியில் சரிந்திடுவேனோ ..???
 
தொட்டில் மீனாய் துள்ளி குதிக்கிறேன்
ஆழியில் கலந்திட நிலத்தில் நீந்துகிறேன்
கடற்கரை நானும் காண்பேனோ
கல்லறை கண்டு துயில்வேனோ  ..???
 
சிறு எறும்பென நானும் ஓடுகிறேன்
தடையென மலையையும் உடைக்கிறேன்
மாளிகை எனக்காய் செய்வேனோ
மண்ணுக்குள் புதைந்தே போவேனோ ..???
 
மனிதனோடு மனிதமாய் வாழுகிறேன்
வியந்தரம் அழித்திட விளைகிறேன்
எழுத்தாணி கொண்டே எதிர்க்கிறேன்
வேகம் கொண்டே அழிப்பேனோ
என்னையும் இழந்து வீழ்வேனோ ..???
 
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

Tuesday, January 7, 2014

தமிழ்த்தாய் – தமிழன் – நான் ...


செவிட்டுக்கிழவியிடம்  கவிதை  வாசித்தேன்
சிரித்துக்கொண்டே  முத்தமிட்டாள்
நான் அணைத்துக்கொண்டு அழுதுமுடித்தேன் …!!!

குருட்டு இளைஞனிடம்
ஓவியம்  நீட்டினேன்
தடவிப்பார்த்து  பணமா  என்றான்
கிழித்துவிட்டு  அலுவல்  நகர்ந்தேன்  …!!!

செந்தமிழ்  பைந்தமிழ்  என்னுயிர்  தமிழென்றேன்
உள்ளின்று  உறங்கியவள் 
விழித்துக்கொண்டு  பசிக்கிறதென்றாள்
தட்டுத்தடுமாறி ஆங்கிலம்  கற்றேன் …!!!

நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...