Wednesday, September 25, 2013

ஒரு முகக் காதல். . . .


தலை குனிந்தே வாழும்
இவள் இதோ ...
இவன் முகத்தை  மட்டுமே 
காண  நிமிர்கிறாள் …
இவன் போகும்  திசையெல்லாம்
பூவிழி  நோகாமல்  பார்த்திருக்கிறாள் ....
என்றாவது  இவன்  என்னை 
காண்பான் என  காத்திருக்கிறாள் ....

இவனோ பொது  சேவையில் 
மட்டுமே  புன்னகைக்கிறான் ...
ஒவ்வொரு  நாள்  பிரியும்போதும்
மறுநாள் காணும்
மலிவான மகிழ்ச்சியிலே
மண்ணை காண்கிறாள் ...

தொட முடியாத  தூரத்தில் 
இவன்  இருந்தாலும் 
தொடத்துடிக்கிறாள் ...
அணைக்க முடியாத அனலாய்
இவன்  இருந்தாலும் 
இவன் அன்பை மட்டுமே
எதிர்பார்க்கிறாள் ...

அழகில் அவளுக்கு
இணையுமில்லை ...
அன்பில் அவளுக்கு
நிகருமில்லை ...
மங்களத்தில் அவள்
மலிந்தவளுமில்லை ...
மன்னவன் நேசமே
அவள் காணும் எல்லை ...

ஆயினும்  ஏனோ ...???
இவள் காதலை
அந்த கல்நெஞ்சக்காரன் 
புரிந்துகொள்ளவே இல்லை ...
இவள் கன்னியத்தை
அந்த செந்நிறத்தான் 
தெரிந்து கொள்ளவும் இல்லை ...

உலகம் தொடங்கிய 
காலம் முதல் இன்று வரை
இவளின் ஊமைக்காதலை 
அவன் உணரவும் இல்லை ...

என் அழகுத் தோழியே 
சூரிய காந்தி ...
ஒருதலைக் காதலெல்லாம்
ஒரு வருடம் கூட நீண்டதில்லை
உன்னால் மட்டும்
எப்படி சாத்தியம்
யுகயுகமாய் காத்திருக்க ...


நாளையாவது உன் காதல் 
அந்த கதிரவனோடு
கைக்கோர்த்திடுமா என்றேன் ...

முகமலர்ச்சி கொண்டே
மெலிதாய்  பூவிதழ் விரிய
மெல்ல பேசினால் அவள் ...


ஆதவனின் அருகில் வாழ
அடம்பிடிக்கும் என் மனம் ...
பகலவன் பாசத்திற்க்காய்
பரிதவிக்கும் என் உயிர் ...
ஆயினும்
நாளை என்னவாகும்
ஆசைகள் அனைத்துமிழக்க
என்னை வேரோடு
வீழ்த்திடுவனோ இவ்விவசாயி ...

இவ்வொரு ஜென்மம் போனாலென்ன
ஏழு ஜென்மங்களும் கடந்தாலென்ன
எட்டாவது ஜென்மம் கொண்டாலும்
என்னவனின் கரங்கள் தீண்ட
காத்திருப்பேன் என்றாள் அவள்
...


நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா ...

No comments :

Post a Comment