Monday, July 22, 2013

நிஜம் கதையானது .... !!! எதிர்நீச்சல் பெண் சாந்தி ...!!!


தமிழச்சி என்பதாலே 
இவள் தரம் தாழ்த்தப்பட்டாளோ ...?
ஏழ்மையில் வளர்ந்ததாலே
இவள் ஏமாந்து போனாளோ ...?


பெண்ணாக பிறந்ததாலே
இவள் பேரம் பேசப்பட்டாளோ ...?
கண்ணாடி கனவுகளில்தான்
கயவர்கள் கல்வீசக்கண்டாளோ ...?


புகழ் சேர்த்த கைதட்டல்கள்
பின்னால் ஒலிக்க ...
பாராட்டு பல கேட்டு
பழகிய காதுகளுக்கு ...
தன் மனமுடைக்கும் கூச்சலும்தான்
முதல்முறை கேட்டிட ...
வாய் இருந்தும் ஊமையாய்
சபைமுன் நின்றால் இவள் ...


சாந்தி என பெயர் சூடியதாலே
சகுனிகளின் சூழ்ச்சியிலும்
சத்தம் ஏதுமின்றி
சாந்தம் கொண்டால் இவள் ...!!!!


" வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம்
என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் "
வீரம் கொண்டு சாதித்த பெண்ணை
இவள் பெண்ணல்ல எனும்
ஈனமனிதர்கள்தான் வாழ்கின்றார் ... !!!!


நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா

 

Friday, July 12, 2013

சத்தியவான் சாவித்ரியின் கடைசி நிமிடங்கள் ...




சத்தியவான் சாவித்ரியின் கடைசி நிமிடங்கள் ...

பாவங்களை அடுக்கிச் செல்லும்
பாதகர்களைப் பாராத மரணமே
எந்தன் மன்னன் மீது
பார்வை ஏனோ ???


குற்றங்களால் கோவில் கட்டும்
கொடியவர்களைக் காணாத மரணமே
எந்தன் கணவன் மீது
கோபம் ஏனோ ???


அராஜகத்தால் ஆட்சி செய்யும்
அரக்கர்களைப் பாராத மரணமே
எந்தன் அரசன் மீது
ஆத்திரம் ஏனோ ???
 


காமவெறியினால் கல்லறைகட்டும்
கயவர்களைப் பாராத மரணமே
எந்தன் காதல் மீது
கசப்பு ஏனோ ???


கருணையற்ற நீ எந்தன் காதலை
எவ்வாறு அறிந்துகொள்ளப் போகிறாயோ ???
இரக்கமற்ற நீ எந்தன் இதயத்தை
எவ்வாறு தெரிந்துகொள்ளப் போகிறாயோ ???


நேசமற்ற நீ எந்தன் பாசத்தை
எவ்வாறு புரிந்துகொள்ளப் போகிறாயோ ???
உறவுகளற்ற நீ எந்தன் உணர்வுகளை
எவ்வாறு அறிந்துகொள்ளப்  போகிறாயோ ???


கவலைகலற்ற நீ எந்தன் கண்ணீரையும்
கடனாய் கேட்கிறாயோ ???
உயிரை பறிக்கும் நீ எந்தன் உணர்வுகளையும்
கொல்லத் துடிக்கிராயோ ???


உன் பாசக்கயிற்றில் சிக்கிக்கொள்ள
என் பாவலன் என்ன பாவம் செய்தான்
காலமுழுதும் என்னை காதலிக்க
நினைத்ததைத் தவிர ...


என்ன செய்ய உன்னை நான் ???
என் பார்வையில் எரித்துவிடவா ???
என் கண்ணீரில் உன்னை மிதக்க விடவா ???
என் உணாச்சி தீயில் உன்னை உருக்கி விடவா ???


எந்தன் இதய எரிமலையில்
உனக்கொரு வீடு செய்யவா ???
இல்லை உந்தன் பசிதீர
என் உயிரையும்தான் உனக்கு
உணவாய் தந்துவிடவா ???


என்ன வேண்டும் கேள் ...
இந்த உலகத்தில் என்ன உண்டு
என் பாசமுள்ள
கணவனுக்கு மேல் ...



நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா

Saturday, July 6, 2013

மனிதனை மனிதனாய் பாருங்கள் சாதியனாய் அல்ல....

ஒரு சாதாரண மனிதனை
சரித்திர நாயகனாக 
ஒருபோதும் சித்தரிக்காதீர்கள் .....

காதலுக்காக குடிபோதையில்
 மடிந்த மனிதனை 
உங்கள் போராளியாக கருத்தரிக்காதீர்கள் ....

சாதியம் பேசவோ 
ஒரு மனிதனின் சாவில்
 சத்தம்போட்டு சிரிக்கவோ
 நான் சொல்லவில்லை .... 

செய்யும் தொழிலே தெய்வம்
 என்றால் நிச்சயம் 
தொழிலை கொண்டு உருவான
 சாதி ஒழிக்கப்படத்தான் வேண்டும் .....

பிறப்பு சான்றிதல் முதல்
 இறப்பு சான்றிதல் வரை 
அத்தனையிலும் சாதியம் 
வேண்டாமென களம் இறங்குங்கள் 
நானும் கை கோர்க்கிறேன் ....

இளவரசனின் மரணத்துக்காக
 போராட துடிக்கும் முற்போக்குவாதிகள் 
ஏன் திவ்யா தந்தையின் இறப்பை 
கடுகளவும் கண்டுகொள்ளவில்லை ...

இப்பொழுது கதறி அழும் நீங்கள் 
ஏன் அன்று ஒரு தகப்பனின் 
மரணத்தில் துளி அளவும்
 கண்ணீர் சிந்தவில்லை ....

இந்த மனிதநேயம் அப்பொழுது
 ஏன் மடிந்து போனது
 உங்களது சமத்துவம் 
அப்பொழுது ஏன் மரத்துப்போனது....

உங்கள் பார்வையில் 
உயர் குடியில் இறந்தால் 
அவன் சாதியவாதி ...
தாழ்குடியில் மடிந்தால்
 அவன் போராளி ...

மனிதனை மனிதனாய் பாருங்கள் 
சாதியனாய் அல்ல....

நானும் என் எழுத்தாணியும் 
சுப சத்யா

Thursday, July 4, 2013

விவசாயி

சாலையோரக் காட்சிகள்

 

சாலையோரக் காட்சிகள்

வெற்றிலை போட்டுச் சொப்பில்
துப்பினால் மூதாட்டி
நகரிகமற்றவள்
என்றது சமூகம் ....
 
போதை பாக்கை
மென்று சாலையில்
துப்பினான் இளைஞன்
கண்டும் காணாமலும் நாம்...

உடலில் ஊனம்
என்றாலும் உன்னை நம்பி
நான் இல்லை என்பதுபோல் 
உழைத்து வாழும் மனிதர்கள்...

மது மாது என்றால்
மனைவியின் தாலியும்
அறுத்து சாலையில்
மதிமயங்கும் குடிமக்கள்....
 
வாங்கிய காசுக்கு
வஞ்சகம் இல்லாமல்
கவர்ச்சி காட்டும் சினிமா 
நடிகைகளின் படங்கள் சுவரொட்டியில்...
 
கிழிந்த ஆடையில் மானத்தையும்
தன்பிள்ளைக்கு பால் குடுக்கும் மார்பையும்
மறைக்க முடியாமல் தவிக்கும்
பல பெண்கள் நடைபாதையில்...

தலையில் அடித்தபடி
சற்று தூரம் கடந்தேன்...
சாட்டையில் தன்னை தானே 
அடித்துக்கொண்டு
பிச்சை கேட்டான் ஒருவன்...
 
காக்கிச்சட்டையைக் காட்டி 
சாலையோர  வியாபாரியை 
மிரட்டிக் கேட்கிறான் ஒருவன்

போராடிப் பெற்ற இந்தியா
இன்று பல போரட்டதுக்கிடையில்
வியர்வை சிந்தும் விவசாயி
தண்ணீர் வேண்டி கண்ணீர் மழையில்...
 
விவசாயியின் வியர்வைத் துளிகள்
ஏழையின் கண்ணீர்த்துளிகள்
ஈழத்தமிழனின் ரத்தத்துளிகள்
இவை எவற்றுக்குமே மதிப்பில்லாத போது
ஒரு நாகரீக தமிழச்சியாய்
என் குமுறல்கள் கொந்தளித்தாலும்
பெண் பிள்ளை நீ
பேசாதே என்கிறது சமூகம்
 
நானும் என் எழுத்தாணியும்
சுப சத்யா
 

நாங்கள் கவிஞர்கள் ....